சாலை அமைப்பது தொடர்பான புகார்: ஐகோர்ட்டில், அரசு அதிகாரிகள் நேரில் ஆஜர்

சாலை அமைப்பது தொடர்பான புகார் வழக்கில் ஐகோர்ட்டில், அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராகினர்.

Update: 2020-02-29 06:40 GMT
சென்னை, 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், பழைய சாலையை தோண்டி அகற்றாமல், அதன்மேல் புதிய சாலை அமைக்கப்படுவதாகவும், இதனால் சாலையின் உயரம் அதிகரிக்கிறது என்றும், சாலையோரம் உள்ள வீடுகள் பள்ளத்துக்குள் செல்கிறது என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் பழைய சாலையை தோண்டி அகற்றி, சீர் செய்யாமல் கண் மூடித்தனமாக பழைய சாலைகளுக்கு மேல் புதிய சாலைகள் அமைக்கின்றனர். இதுபோன்ற ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்.

இதுபோன்ற ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் விதமாக அதிகாரிகளின் தொலைபேசி எண்களை பத்திரிகைகளில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக சாலைக்கு மேல் புதிய சாலைகளை போடுவது ஏன்? என்பது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த துறைகள் சார்பாக உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகினர்.

இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் 4 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்