அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் விதிகளை மீறி 135 பேர் பணி நியமனம் - அரசு உயர்மட்டக்குழு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் விதிகளை மீறி 135 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு உயர்மட்டக்குழு அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-03-03 21:30 GMT
சென்னை, 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2007-ம் ஆண்டு நிர்வாக வசதிக்காக கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சென்னை என 5 மண்டல அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன. அதன்பின்னர், இந்த மண்டல அலுவலகங்களை ஒன்றாக இணைக்க அரசு முடிவு செய்தது.

அதற்கான சட்டமசோதா கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு 5 மண்டல அலுவலகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த இணைப்பின்போது, பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியிடங்களுக்கு பணிநியமனம் நடத்தப்பட்டதாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அரசு இந்த புகாரை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டாக்டர் ஆர். ஆனந்தகுமார், ஆர்.லில்லி மற்றும் அதிகாரிகள் எஸ்.மனோஹரி, ஆர்.மாலதி, சி.கோபி ரவிகுமார் அடங்கிய உயர்மட்டக்குழுவை நியமித்தது. அந்த குழு இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் மண்டல அலுவலகங்களாக இருந்த கிளைகளை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைத்தபோது, நியமனம் செய்யப்பட்ட 158 பணியிடங்களில் 23 பணியிடங்கள் போக, மீதமுள்ள 135 பணியிடங்கள் விதிமுறைகளை மீறி நியமனம் செய்திருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 135 பேரின் பணி நியமனம் செல்லாது என்றும், அவர்களை தேர்வு செய்தவர்கள் மீது பல்கலைக்கழக ஒழுங்கு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த குழு ஒருமனதாக பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணி நியமனம் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த 135 பேரும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் 16 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்