அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் மனு - தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-06 23:30 GMT
சென்னை, 

மத்திய அரசின் தரவரிசைப்பட்டியலின்படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து சில கருத்துகளை தெரிவித்தார். அதேபோல, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் குறித்தும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த கருத்துகள், தமிழக அரசையும், முதல்-அமைச்சர், அமைச்சர் ஆகியோருக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கூறி, மு.க.ஸ்டாலின் மீது பல்வேறு தேதிகளில் 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தற்போது இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து தனக்கு எதிராக தொடரப்பட்ட இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும். இந்த வழக்குகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து, அறிக்கை வெளியிட்டேன். அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை திசை திருப்பவே என் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இந்த 3 மனுக்களுக்கும் அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கூறி விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்