குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை கேட்ட வழக்கு - ஐகோர்ட்டில் நாளை விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை கேட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Update: 2020-03-09 22:15 GMT
சென்னை,

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சையது இப்ராஹிம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த உரிமை வழங்கியுள்ளது. ஆனால், அந்த உரிமையை தவறாக சிலர் பயன்படுத்துகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி முதல் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு போலீஸ் அனுமதியும் பெறவில்லை. சாலைகளை மறித்து நடத்தப்படும் இதுபோன்ற போராட்டங்களினால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த போராட்டத்தை தடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘ஏற்கனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்குகள் நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது’ என்று கூறினார். இதையடுத்து, அந்த வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்த்து புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்