தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு - அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

அயர்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவரையும் சேர்த்து தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-20 00:00 GMT
சென்னை, 

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 27-ந்தேதி ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த என்ஜினீயருக்கு அறிகுறி இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. பின்னர் அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். பின்னர் 2-வது கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து கடந்த திங்கட் கிழமை வீடு திரும்பினார்.

மேலும் வீடு திரும்பிய அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் பரவி வந்தது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறுத்துள்ளார்.

இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் கடந்த 12-ந்தேதி சென்னை வந்தார். அவர் அமைந்தகரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அவருக்கு இருமல், காய்ச்சல் இருந்ததால் நண்பர்கள் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 17-ந்தேதி அயர்லாந்து டப்ளினில் இருந்து சென்னை வந்த 21 வயது மாணவர் ஒருவர், விமானநிலையத்தில் பரிசோதனை செய்த பிறகு, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரை மருத்துவமனையில் சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 94 ஆயிரத்து 236 பேருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 3,481 பேரை தொடர் கண்காணிப்பிலும், 39 பேர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 320 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவில் வந்துள்ளது. 86 பேரின் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்