கொரோனா சோதனை: 316 பயணிகள் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு

வெளிநாடுகளில் இருந்து வந்த 316 பயணிகளின் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-21 23:30 GMT
மதுரை,

துபாயில் இருந்து ஒரு விமானம் நேற்று முன்தினம் மாலை மதுரைக்கு வந்தது. அந்த விமானத்தில் 6 குழந்தைகள் உள்பட 155 பயணிகள் இருந்தனர். விமானநிலையத்தில் அவர்கள் அனைவருக்கும் 40-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அந்த பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களது கையில் ஏப்ரல் 17-ந்தேதி வரை வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன் என்ற வாசகம் அடங்கிய முத்திரை சீல் குத்தப்பட்டது. அதுபோல், பயணிகள் அனைவரிடமிருந்தும் உறுதி மொழி கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அந்த உறுதிமொழி கடிதத்தில், “கொரோனா அறிகுறிகள் இல்லாத போதும் என்னை நான் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வேன். தன் சுத்தத்தை பேணி காப்பேன் என்றும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுகுவேன், சமுதாய நலன் கருதி இதை நான் கண்டிப்பாக கடைபிடிப்பேன்” என எழுதப்பட்டிருந்தது.

5 பேர் கண்காணிப்பு

இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த 5 பேர் தவிர மற்ற அனைவரும் முத்திரை குத்தப்பட்டு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 50 வயதுக்கு மேற்பட்ட 5 பேரை மட்டும் முகாம்களில் தங்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டது. வயது முதிர்வின் காரணமாகவும், சர்க்கரைநோய், ரத்த அழுத்த நோய் போன்றவை கேட்டறிந்து அதன்படி அவர்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் முகாமில் தங்க வைத்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து ஒரு சில தினங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

சிங்கப்பூர் விமானம்

இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 166 பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்த பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.

அதன்பின்னர் அவர்களிடமும் சுய உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டது. கைகளிலும் சீல் வைக்கப்பட்டது. 316 பயணிகள் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்