திருச்செந்தூர், பழனி முருகன் கோவில் மேம்பாட்டுக்கு ரூ.176 கோடி: கோவில்களில் 10 ஆயிரம் ஏழை-எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம்

கோவில்களில் 10 ஆயிரம் ஏழை-எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும். திருச்செந்தூர், பழனி முருகன் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி ஆகிய கோவில்கள் ரூ.176 கோடியில் மேம்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Update: 2020-03-24 23:30 GMT
சென்னை, 

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

* தொன்மை வாய்ந்த 55 கோவில்களில், அரசு மற்றும் கோவில் நிதியில் இருந்து ரூ.50 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

* நிதி வசதிமிக்க 50 கோவில்களில் ரூ.4 கோடி செலவில் ஏழை-எளிய மற்றும் நலிவடைந்த 10 ஆயிரம் ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும்.

* ரூ.8.77 கோடி மதிப்பீட்டில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்கப்படும்.

* 1,000 கிராமப்புற கோவில்கள் திருப்பணிக்காக ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும்.

* திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் புதிய மலைப்பாதை அமைக்கப்படும்.

* மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மின் தூக்கி அமைக்கப்படும்.

* கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் துறை நிலையிலான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* 9 முதுநிலை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.16.43 கோடி செலவில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்படும்.

* பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் ராமேஸ்வரம் ராமநாதபுரம் கோவில் ஆகிய கோவில்களின் பக்தர்கள் வசதிக்காக ரூ.176.65 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கூடிய பெருந்திட்டம் தயாரிக்கப்படும். முதற்கட்டமாக ரூ.80.12 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்து ஓய்வு பெற்ற கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து, ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள 331 கோவில்களில் தூய்மை மேம்படுத்தப்படும். இந்த கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்