அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-03-24 22:15 GMT
சென்னை, 

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் சுகாதாரத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசியதாவது:-

* 500 புதிய 108 அவசர கால ஆம்புலன்சுகள் ரூ.125 கோடியில் வாங்கப்படும்.

* கிராமப்புற வளரிளம் பெண்களுக்கு இடையே தன் சுத்தத்தை ஊக்குவிக்க மாதவிடாய் கால தன் சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ரூ.37.47 கோடி செலவில் நகர்ப்புறத்தில் பயிலும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் ‘சானிடரி நாப்கின்’ வழங்கப்படும்.

* சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடினமான அறுவை சிகிச்சை துல்லியமாகவும், விரைவாகவும், உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க நவீன ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

* கொரோனா வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், சார்ஸ் போன்ற தொற்றுநோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, மதுரை மாவட்டம் தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானிடோரியம் ஆகிய மருத்துவமனைகளும், சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆய்வகத்தை ‘பயோ சேப்ட்டி லெவல்-3’ நிலைக்கு மேம்படுத்துவதற்கும் ரூ.110 கோடி செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்