சிறுதொழில் செய்பவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர்-பிரதமருக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை

சிறுதொழில் செய்பவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்" என கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-03-25 05:55 GMT
சென்னை

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. டெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் குணமடைந்துள்ளதாகவும் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவும் தீவிரம் குறித்து  பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.

அதில், 

வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கொரோனா வைரஸ் உங்கள் வீட்டுக்குள் நுழைய வழி வகுத்து விடும். ஆகவே, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நாட்டு மக்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். 

இந்த 21 நாள் ஊரடங்கை பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்படுவோம். இது, பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய நேரம். கட்டுப்பாடாக இல்லாவிட்டால், பேராபத்து ஏற்படும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் தினக்கூலி பணியாளர்கள்,சிறு தொழில் செய்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறி இருப்பதவாது:-  

"உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில், அணி சேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்" என கமல்ஹாசன் கூறி உள்ளார். 

மேலும் செய்திகள்