தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்வு - ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-29 23:45 GMT
சென்னை, 

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து நேற்று சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வீட்டு கண்காணிப்பில் 43 ஆயிரத்து 538 பேர் உள்ளனர். மேலும் 1,763 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 1,666 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 89 பேருக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. தமிழகத்தில் 29-ந் தேதி(நேற்று) புதிதாக 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50 ஆகி உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட 8 நபர்களில், 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 8 பேரும் ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களுடன் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 295 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் 11 மாவட்டங்களில் கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு 500 மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் 270 ஊழியர்கள் கொண்டு 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், சேலத்தில் 500 ஊழியர்கள் கொண்டு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், மதுரையில் 220 ஊழியர்கள் கொண்டு 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சளி, மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த பகுதியில் கொரோனா தொற்று இருந்தால் அது வெளியே பரவாமல் தடுக்கப்படும்.

தமிழகத்தில் வருவாய், மின்சாரம், உள்ளாட்சி துறை உள்ளிட்டவைகளில் கொரோனா தடுப்பு பணி குறித்து தீவிர ஆலோசனை செய்யப்பட்டது. கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ‘வார்டுகள்’ அமைக்க பொதுப்பணித்துறையும் உதவி செய்து வருகிறது. மேலும் இந்தியாவில் மற்ற விமான நிலையங்களுக்கு வந்துள்ள தமிழக பயணிகளின் தகவல்களை குடியுரிமை ஆணையத்திடம் வாங்கியுள்ளோம்.

அந்த தகவல்களை அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் கொடுத்து ஆய்வு செய்ததில் தமிழகத்தில் தற்போது 43 ஆயிரத்து 538 பேர் உள்ளது தெரியவந்துள்ளது. எனவேதான் அவர்களை வீட்டு கண்காணிப்பில் வைத்துள்ளோம். நேற்று முன்தினம் மேற்கு மாம்பலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வாலிபர் அமெரிக்கா சென்று வந்தது தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் இறக்கவில்லை. மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு இல்லாமல் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற பலர் வருகின்றனர். அதில் சில சமயம் உயிரிழப்புகளும் நேரிடும். தற்போது தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க 17 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 500 படுக்கைகளும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 350 படுக்கைகளும், பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இதைப்போல் விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் கூடுதலாக 4 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதைப்போல் தனியார் மருத்துவமனைகளிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். பெரிய தனியார் மருத்துவமனைகள் தனி கட்டிடம் அல்லது ‘வார்டு’ கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். 4 தனியார் மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை செய்யும் வசதியும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரையும் 28 நாட்கள் கண்காணிப்பில் வைத்துள்ளோம். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்