வங்கிகள் கடனுக்கு கூடுதல் வட்டி வசூலிக்கக்கூடாது - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

வங்கிகள் கடனுக்கு கூடுதல் வட்டி வசூலிக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-04-02 22:15 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஆனால், இதில் நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக அபராதம் வசூலிக்க வகை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

கடன் தவணை ஒத்திவைப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்பதால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முன்வராத வங்கிகள், கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று கூடுதல் வட்டி செலுத்த வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்துவது வணிக அறத்திற்கு எதிரானது ஆகும். எனவே, இந்த பிரச்சினையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட வேண்டும். 3 மாத கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31-ந் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்