கொரோனா நிவாரணத்தை விருப்பத்தின் பேரில் விட்டுக்கொடுக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நிவாரண உதவியாக வழங்கப்படும் ரூ.1,000 மற்றும் விலையில்லா உணவு பொருட்களை விருப்பத்தின் பேரில் விட்டுக்கொடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-04-02 22:45 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, இந்த மாதம்(ஏப்ரல்) அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

நேற்று முதல் வினியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நிவாரணத் தொகை மற்றும் விலையில்லா உணவு பொருட்களை விருப்பத்தின் அடிப்படையில் விட்டுக் கொடுக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை ரூ.1,000 மற்றும் விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிவாரண உதவித்தொகை மற்றும் விலையில்லா பொருட்களை பெற விருப்பமில்லாதவர்கள் tnpds.gov.in என்ற இணையதளத்திலும், tnpds செயலியிலும் சென்று உதவித்தொகை ரூ.1,000 அல்லது விலையில்லா பொருட்கள் மட்டும் அல்லது இரண்டையும் விட்டுக்கொடுக்கும் தங்களது விருப்பத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு விட்டுக் கொடுப்பது ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விட்டுக்கொடுக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்