கொரோனா நிவாரணம் ரூ.1,000; ஏப்ரல் 7 முதல் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு உத்தரவு

வரும் 7ந்தேதி முதல் கொரோனா நிவாரண தொகை ரூ.1,000 வீடுகளுக்கு சென்று நேரிடையாக வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்து உள்ளது.

Update: 2020-04-03 13:13 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, இந்த மாதம் (ஏப்ரல்) அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதன்படி, நிவாரணம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது.  நேற்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 11.63% ஆகும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

நிவாரண பொருட்களை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவௌியினை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.  வரும் 7ந்தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது.  அதற்கு பதிலாக, வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்