ஊரடங்கு காரணமாக வியாபாரம் பாதிப்பு: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மூங்கில் பொருள் உற்பத்தியாளர்கள் - அரசு உதவ கோரிக்கை

ஊரடங்கு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மூங்கில் பொருட்கள் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே அரசு உதவி செய்ய முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-04-04 20:45 GMT
சென்னை, 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவினை ஏற்று, இந்த காலக்கட்டத்தில் ஏராளமானோர் வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்த தடை உத்தரவு சிலருடைய வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டுள்ளது. அவர்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே நிற்கதியாய் நிற்கும் சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுவும் மறுக்கமுடியாத உண்மை. சென்னை வால்டாக்ஸ் சாலையில் மூங்கில் கூடை, பாய், முரம், மூங்கில் தட்டி, வெட்டி வேர் தட்டி உள்பட மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள் தயாரிப்பவர்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் அன்றாட வியாபாரத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் வியாபாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து 45 வருடத்துக்கும் மேலாக இதே தொழிலை செய்து வரும் ஜி.தனகோட்டி என்ற மூதாட்டி கூறியதாவது:-

மூங்கில் தட்டிகள், கூரைகள், குளிர்ச்சியை தரும் வெட்டி வேரால் செய்யப்படும் தட்டிகளுக்கு கோடை காலம்தான் சீசன். இந்த காலக்கட்டத்தில்தான் நாங்கள் ஓய்வு இல்லாமல் வேலை செய்வோம். இப்போது கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் ஆண்டு முழுவதும் எங்களுடைய குடும்பத்தை நடத்துவோம். ஊரடங்கு காரணமாக வாங்குவதற்கு யாரும் வராததால் செய்து வைத்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. வியாபாரம் இல்லாததால் ஒரு வேளை சாப்பாடுக்கு கூட கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியை வைத்துதான் நாட்களை கடத்துகிறோம்.

இந்த தொழிலில் நான் ஈடுபட்டுள்ள 45 ஆண்டு காலத்தில் இதுபோன்ற ஒரு சோதனையை சந்தித்ததே கிடையாது. இதனை நினைத்து பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

ஊரடங்கு காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். சமூக அக்கறை கொண்டவர்களும் எங்களுக்கு உதவவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்