முழு ஊரடங்கு: 5 மாநகராட்சி பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை கடைகள் திறக்க அனுமதி

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-04-25 07:02 GMT
சென்னை,

நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வருகிற மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த ஊரடங்கு, ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள், தொடர்ந்து பல இடங்களில் வெளியே நடமாடுவதும், மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்கின்றனர்.

இதனால், தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், அரசு சில முடிவுகளை எடுத்து உள்ளது.

இதன்படி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29-4-2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.  இதேபோன்று, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 28-4-2020 செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பொதுமக்கள் இன்று அதிக அளவில் காய்கறி சந்தைகள், மளிகை கடைகளில் குவிந்து வருகின்றனர்.  வரும் 4 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இன்று ஒரு நாளே கடைசியாக இருப்பதனால், கடைகளுக்கு செல்லும் மக்கள், சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற முடியாத சூழல் எழுந்துள்ளது.  இதனை தொடர்ந்து, பொதுமக்கள் ஒன்றாக கூடுவது தவிர்க்கப்படும் வகையில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

எனினும், இந்த 5 மாநகராட்சி பகுதிகளில், மாற்று திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்ட மக்களின் தேவைக்காக, காய்கறி, பால், உணவு உள்ளிட்ட பொருட்களை அரசு அனுமதியுடன் வாகனங்களில் சென்று வீடுகளுக்கு முன் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்