ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் எனத் தகவல்

ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Update: 2020-05-02 08:51 GMT
சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  பின்னர் 24-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். என்றாலும் கொரோனா பரவும் வேகம் குறையவில்லை. இதைத்தொடர்ந்து மே 3-ந் தேதி (நாளை) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. 

இந்த நிலையில்,  தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசின் முடிவுக்கு   தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும். சிறு குறுதொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்