தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு கண்டனம்; மு.க. ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து குடும்பத்துடன் போராட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2020-05-07 05:43 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கடந்த 4ந்தேதி முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

சென்னை அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.  இதேபோன்று, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்தது.

தொடர்ந்து தமிழகத்தில் இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கான பணிகள் நடந்தன.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சார்பில் அறிக்கை விடப்பட்டது.  அதில், தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும்.  5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வெளியே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்க வேண்டும் என தெரிவித்தனர்.

மது கடைகள் திறப்பது சமூக தொற்று பரவும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.  மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அ.தி.மு.க. அரசை கண்டித்து கருப்பு சின்னம் அணிவீர்.  கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்றும் தெரிவித்தனர்.

இந்த சூழலில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிரான மனு மீது நடந்த விசாரணையில், சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்ளிட்ட ஊரடங்கு விதிமுறைகளுடன் கடைகளை திறக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினார்.

அவர், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தின் முன்பு குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.  அவருடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கருப்பு ஆடைகள் மற்றும் கருப்பு கொடிகளுடன் நின்றனர்.  அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கமிட்டபடி இருந்தனர்.

மேலும் செய்திகள்