ஊரடங்கு தளர்த்தப்படும் வரை பெண் பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கு விலக்கு - மின்சார வாரிய தொழிற்சங்கம் கோரிக்கை

ஊரடங்கு தளர்த்தப்படும் வரை பெண் பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மின்சார வாரிய தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-05-07 20:15 GMT
சென்னை, 

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பளாயிஸ் பெடரேஷன் பொதுச்செயலாளர் அ.சேக்கிழார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 4-ந்தேதியில் இருந்து அனைத்து பொறியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நூறு சதவீதம் பணி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 

தற்போதைய சூழலில் வீடு வீடாக சென்று மின்சாரம் கணக்கிடுவது, பழுது பார்க்க 24 மணி நேரமும் பணி செய்ய வலியுறுத்தப்படுகிறது. இதனால் சென்னை, கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் 11 தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் வரை முந்தைய மாத மின்சார கட்டணத்தை செலுத்த அறிவுறுத்துவதன் மூலம் கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். 

அதேபோல் போக்குவரத்து இல்லாத நிலையில் பெண் தொழிலாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஊரடங்கிலும் கடந்த 40 நாட்கள் தடையில்லா மின்சாரம் வினியோகித்ததற்காக அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்