ஊரடங்கால் பஸ், ரெயில் சேவை முடக்கம்: சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கால் பஸ், ரெயில் சேவை முடங்கியதால் 2 சைக்கிளை விலைக்கு வாங்கி, சென்னையில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு 4 வடமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.

Update: 2020-05-08 21:45 GMT
சென்னை, 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பலரையும் தனி மரமாய் நிற்கவேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், பிழைக்க வந்த இடத்தில் வசிப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலையிலும் உள்ளனர். மேலும் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். போதுமான நிதி ஆதாரம் இல்லாததால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கை ஏந்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

அதேபோல பலர் தங்கள் முதலாளிகள் கைவிட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு தங்களை அனுப்பி வைக்குமாறு மாநகராட்சி அலுவலக படிக்கட்டுகளில் தினந்தோறும் ஏறி, இறங்கி வருகிறார்கள். அதேசமயம் சிலர் சொந்த ஊர்களுக்கு எப்படியாவது சென்றுவிடவேண்டும் என்பதற்காக நடை பயணமாக செல்கிறார்கள். அவர்கள், கையில் மூட்டை, முடிச்சுகளுடன் நெடுஞ்சாலையோரங்களில் சாரை, சாரையாக வட மாநிலங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபுர் மாவட்டம் மரிஹான் பகுதியை சேர்ந்தவர்கள் விஷால் குமார், ஆஷிஸ்குமார், மகேந்திர குமார், அமித் குமார். இந்த 4 பேரும் சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் எந்திர ஆபரேட்டர்களாக பணியாற்றி வந்தனர். ஊரடங்கு காரணமாக தொழில் முடங்கியதால், வேலைவாய்ப்பு இல்லாமல் அவர்கள் தவித்தனர். இதனால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கை ஏந்தும் நிலை இருந்தது.

இதையடுத்து சொந்த ஊருக்கு செல்வதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வராத நிலையில், அவர்கள் வேலை பார்த்த இடத்தின் அருகாமையில் உள்ள ஒரு கடையில் 4 பேரும் சேர்ந்து பணம் கொடுத்து 2 சைக்கிள்களை விலைக்கு வாங்கினார்கள். இந்த சைக்கிள் மூலம் சொந்த ஊருக்கு செல்வதற்கான தங்களுடைய பயணத்தை நேற்று தொடங்கினார்கள். சென்னையில் இருந்து மிர்சாபுர் இடையேயான 1,800 கி.மீ. தூரத்தை 10 நாட்களில் கடந்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தோம். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுத்து கை தான் வலித்ததே தவிர, சொந்த ஊருக்கு செல்வதற்கான வழி மட்டும் பிறக்கவில்லை. சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ், ரெயில் வசதி இல்லாததால் நடந்து செல்வது என்பது சாத்தியம் இல்லை. இதனால் வேலை செய்து சேமித்து வைத்திருந்த பணத்தில் 4 பேரும் சேர்ந்து 2 சைக்கிள்களை வாங்கினோம். இந்த சைக்கிள்களில் மெல்ல, மெல்ல ‘கூகுள் மேப்’ உதவியுடன் ஒருவருக்கொருவர் மாற்றி, மாற்றி சைக்கிளை அழுத்தி சென்று விடுவோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்