சென்னை போலீசில் அதிர்ச்சியூட்டும் தகவல்: 2 உயர் அதிகாரிகளை கொரோனா தாக்கியது - பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது

சென்னையில் கூடுதல் போலீஸ் கமிஷனர் உள்பட 2 உயர் அதிகாரிகளை தாக்கி கொரோனா அதிர்ச்சியூட்டியது. மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை போலீசில் பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து விட்டது.

Update: 2020-05-12 22:00 GMT
சென்னை, 

உயிரை பணயம் வைத்து பணியாற்றும் போலீஸ்துறை மீது கொரோனா தொடர்ந்து கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு துணை கமிஷனர், 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என சென்னை போலீசில் ஏற்கனவே 94 பேரை கொரோனா தாக்கி உள்ளது.

இந்த நிலையில் நேற்று சென்னை கூடுதல் கமிஷனர் ஒருவரை தாக்கி கொரோனா அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க் கப்பட்டார். அவரது பணியை இன்னொரு கூடுதல் கமிஷனர் ஜெயராம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர், துறைமுகம் உதவி கமிஷனர் மற்றும் 3 போலீஸ்காரர்களும் நேற்றைய கொரோனா தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றனர்.

தியாகராயநகர் துணை கமிஷனர் அவரது வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு மீண்டும் ஒரு முறை சோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

நேற்று சென்னை போலீசில் கொரோனா 6 பேரை தாக்கியது. இதனால் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை சென்னை போலீசில் 100 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்