“ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மு.க.ஸ்டாலின் அவதூறு பிரசாரம் செய்வதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-05-23 23:15 GMT
சேலம்,

சேலத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவருடைய கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அதற்காக என் மீதும், அரசு மீதும் குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை விமர்சனம் செய்த காரணத்தினாலே, அந்த மக்களை இழிவுபடுத்திப் பேசியதாக கருதிய காரணத்தினாலே, ஆதி தமிழர் மக்கள் கட்சியின் மதுரையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

அந்த சட்டத்தின் வாயிலாகத் தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக வேண்டும் என்றே திட்டமிட்டு ஒரு பொய்யான, அவதூறான பிரசாரத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு தனிப்பட்ட நபர், ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசுகின்றபொழுது அவர் புகார் செய்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையிலே காவல் துறை சட்ட ரீதியாக கைது செய்கிறது. இதற்கும், அரசுக்கும் என்ன சம்பந்தம்?. இதற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்பந்தம்?. வேண்டும் என்றே திட்டமிட்டு, ஒரு அவதூறான பிரசாரத்தை செய்து, அனுதாபத்தைத் தேடிக்கொள்வதற்காக இந்த கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர், அவருடைய கட்சியை சேர்ந்தவர் இழிவான பேச்சை பேசிய உடனேயே கண்டித்திருக்க வேண்டும். அதுதான் ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு. அதை விட்டுவிட்டு, மற்றவர்கள் மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்.

ஏதோ இந்த ஆர்.எஸ்.பாரதி மிகப்பெரிய விஞ்ஞானி மாதிரியும், அவர் என் மீது ஊழல் புகார் கொடுத்ததாகவும், அதனால் தான் செய்தது போல் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. அவர் என்ன ஊழல் குற்றச்சாட்டு கொடுத்திருக்கிறார்? எதுவும் கொடுத்தது போல் எனக்கு தெரியவில்லை. ஏதோ பேப்பரில் எழுதிக்கொடுக்கிறார், பத்திரிகைகளில் பரபரப்பு செய்தி வர வேண்டும் என்பதற்காக.

ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்புப் பிரிவில் ஒரு வழக்கு தொடருகிறார், ஒரு மனு கொடுக்கிறார். இன்னும் அந்த டெண்டரே வரவில்லை. அதிலும் இவர்களுக்குத் தான் டெண்டர் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். அந்த டெண்டரை திறக்கும்போது தான் யார் டெண்டர் போட்டார்கள் என்றே தெரியும். அப்படியிருக்கும் பொழுது, எப்படி ஆர்.எஸ்.பாரதிக்கு இவர் தான் டெண்டர் போடுகிறார் என்று தெரியும்?. இதே மிகப்பெரிய தவறு.

தி.மு.க. ஆட்சியில் அப்படி இல்லை. ஏனென்றால் எல்லாம் பாக்ஸ் டெண்டர், யாருக்கு வேண்டுமோ அவர்களுக்குத்தான் பணியை கொடுப்பார்கள். அப்பொழுது, ஊழல் நடப்பதற்கு வாய்ப்பு இருந்தது. தி.மு.க. ஆட்சியில் அப்படி நடந்தது. அதே எண்ணத்தில் தான் இப்பொழுது மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அது தவறு. இது இ-டெண்டர். தகுதியான யார் வேண்டுமானாலும் இந்த டெண்டரில் கலந்துகொள்ளலாம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, அதனால் அதற்குள் முழுவதுமாக செல்ல முடியவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்