17 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுகாதார அதிகாரிகளாக நியமனம் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உத்தரவு

17 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுகாதார அதிகாரிகளாக நியமனம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டார்.

Update: 2020-05-24 20:53 GMT
சென்னை,

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் அரசுக்கு ஒரு முன்மொழிவை சமர்ப்பித்தார். அதில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மூத்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை பணி இடமாற்றம் செய்வதன் மூலம், தமிழக பொது சுகாதார சேவை துறையின் சுகாதார அதிகாரிகளாக நியமிக்கவேண்டும் என்று கோரியிருந்தார். இதற்காக தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, 18 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 17 பேருக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள பொதுசுகாதார நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் சுகாதார அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 17 பேரும் தமிழகத்தில் கன்னியாகுமரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதன் மூலம், சுகாதார அதிகாரிகளாக பதவி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல திருப்பூர் மாநகராட்சியின் நகர சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் பூபதி புதுக்கோட்டை நகராட்சி சுகாதார அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி நகர சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் ஜெகநாதன், சென்னை மருத்துவக்கல்லூரியின் உதவி பேராசிரியராக (கம்யூனிட்டி மெடிசின்) மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கண்ட உத்தரவுகளை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்