தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு - அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீட்ப்பட்டுள்ளது.

Update: 2020-05-25 22:30 GMT
சென்னை, 

தமிழக அரசு சமீபத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள், அதாவது, சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள், 25-ந் தேதியில் இருந்து (நேற்று முதல்) 25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மே 17-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பல்வேறு தளர்வுக்கான உத்தரவுகளையும், திருத்தப்பட்ட உத்தரவுகளையும் அரசு பிறப்பித்து வருகிறது.

இந்த நிலையில் 24-ந் தேதியன்று தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையிலும், அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் முன்மொழிந்த கருத்தின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய மற்ற பகுதியில், 100 தொழிலாளர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட தொழிற்சாலைகள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

100 எண்ணிக்கைக்கு மேல் தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலைகள், 50 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 100 தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்