கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-28 14:10 GMT
சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இன்று அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதனால தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது;-

“தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 55 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 10,548 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை குணப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிற மாநிலங்களில் இருந்து வந்த 1,253 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வருபவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 4,55,216 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.

மருத்துவப் பணியாளர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே எண்ணிக்கையை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். உலகம் முழுவதும் பல வல்லரசு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

பெல்ஜியம் நாட்டில் இறப்பு விகிதம் 16 சதவீதமாக உள்ளது, அதுவே பிரான்ஸ் நாட்டில் 15 சதவீதமாக இருக்கிறது. இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் இறப்பு விகிதம் 14 சதவீதமாக உள்ளது. அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள அமெரிக்காவில் இறப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் அரசின் தீவிர நடவடிக்கையால் இறப்பு விகிதம் மிக குறைந்த அளவில் 0.7 சதவீதமாக உள்ளது.

மூன்று மாதங்களாக கடினமாக உழைத்து வரும் மருத்துவப் பணியாளர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படுக்கை வசதிகள், நிதி உதவி என அனைத்தையும் தமிழக அரசு செய்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக அரசு தெரிவிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனத்துடன் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களின் உழைப்பு, அரசின் நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் விட பொது மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து நாம் விரைவில் மீண்டு வர முடியும்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்