பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்?

பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் பேருந்து இருக்கைகளில் சமூக இடைவெளி ஸ்டிக்கா் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2020-05-30 01:44 GMT
சென்னை

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் மார்ச் 21 முதல் உரடங்கு  நடைமுறையில் உள்ளது, இது ஆரம்பத்தில் 21 நாட்களாக விதிக்கப்பட்டது, தொடர்ந்து மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது, நான்காவது ஊரடங்கு  மே 31 அன்று முடிவடையும்.

அடுத்த 5-வது கட்ட ஊரடங்கு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த முடிவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது, இது குறித்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து முதலமைச்சர்களிடமும் தொலைபேசியில் மூலம் ஆலோசனை நடத்தினார்

தொடர்ந்து அமித்ஷா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மாநில முதல்-மந்திரிகள் தெரிவித்த கருத்துகளை அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து அவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.

கொரோனா பாதிப்பு எப்போது முடியும் என்று தெரியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை முழுமையாக நீக்கிவிட்டால் கொரோனா சமூக பரவலாக மாறி உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது.

எனவே நாட்டில் தற்போது உள்ள நிலவரப்படி கொரோனா பரவல் அதிகமாக உள்ள நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படலாம் என்றும், மற்ற பகுதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
  
பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில் பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிக்க வசதியாக அரசுப் பேருந்துகளின் இருக்கைகளில் சமூக இடைவெளிக்கான ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்ற வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மண்டலங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

 அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ஏற்றிச் செல்ல மட்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில் பேருந்துகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தால் பேருந்துகளை இயக்கத் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்து அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனா்.இதைத் தொடா்ந்து, கோவையில் உள்ள பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றிப் பயணிக்க இருக்கைகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்துகள் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. சமூக இடைவெளியுடன் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்தால் ஒரு பேருந்தில் இருவா் அமரும் இருக்கைகளில் ஒருவரும், 3 போ் அமரும் இருக்கைகளில் 2 பேரும் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.சமூக இடைவெளியை விட்டு பயணிக்க இருக்கைகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது.

ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமா்ந்து பயணிக்க முடியும். அதே போல், பேருந்தில் நின்று பயணிப்பவா்கள், 2 மீட்டா் இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படும். பேருந்துகளை இயக்க அனுமதி கிடைத்தவுடன் பணிக்குத் திரும்பும் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு முகக் கவசம், கையுறைகள், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும் என கூறினர்.

மேலும் செய்திகள்