நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு கருத்து

நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2020-06-02 22:10 GMT
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் நளினி, முருகன். அண்மையில் இலங்கையில் வசித்து வந்த முருகனின் தந்தை மரணமடைந்தார். அவரது இறுதிசடங்கை ‘வாட்ஸ்-அப்’ வீடியோ காலில் பார்க்க அனுமதி கேட்ட முருகனின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இந்தநிலையில் இலங்கையில் உள்ள முருகனின் தாயாரிடமும், லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும், நளினியும், முருகனும் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினியின் தாயார் பத்மா(வயது 80) ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜனிடம், ‘வாட்ஸ்-அப்’ வீடியோ காலில் பேச இவர்களை அனுமதிப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது?‘ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் உறவினர்களுடன் வீடியோ காலில் பேச கைதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இவர்கள் விவகாரத்தில் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேச அனுமதி கேட்கின்றனர். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றால், மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டி உள்ளது. வேண்டுமென்றால், தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கலாம். வீடியோ காலில் பேச அனுமதிக்க முடியாது‘ என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், ‘வீடியோ காலில் பேச சிறை விதிகளின் படி முருகனுக்கும், நளினிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்கக்கூடாது‘ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது என்று தமிழக அரசு தீர்மானம் இயற்றியுள்ளது. விடுதலை செய்ய முடிவு எடுத்து விட்டு, தற்போது உறவினர்களுடன் பேச அனுமதிக்க முடியாது என்ற அரசின் நிலைபாட்டில் முரண்பாடு உள்ளது. ஏற்கனவே முருகனின் தந்தையின் இறுதிசடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதி வழங்க அரசு மறுத்துள்ளது. நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும்‘ என்று கருத்து கூறினர். பின்னர், விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைப்பதாகவும், அதற்குள் விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்