திரு.வி.க. நகர் மண்டலத்தில் 2 ஆயிரம் பணியாளர்கள் 24 மணி நேரமும் களப்பணி ஆற்றி வருகிறார்கள்; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

திரு.வி.க. நகர் மண்டலத்தில் 2 ஆயிரம் பணியாளர்கள் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றி வருகிறார்கள் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2020-06-09 06:39 GMT
சென்னை,

சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தலா 2 ஆயிரம் கடந்து சென்றுள்ளது.  இவற்றில் திரு.வி.க. நகர் மண்டலமும் அடங்கும்.  திரு.வி.க. நகர் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.  அவர் கூறும்பொழுது, திருவொற்றியூர்-மணலி-திரு.வி.க. மண்டலம் பகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இந்த மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. 7 லட்சத்து 77 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.  மக்களுக்கு 100 சதவீத விழிப்புணர்வை ஏற்படுத்த இரவு பகல் பாராமல் பணியாற்றுகிறோம்.

தெருவாரியாக ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறோம்.  முதல் அமைச்சரின் வழிகாட்டுதல்படி கபசுர குடிநீர், சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.  2 ஆயிரம் பணியாளர்கள் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.  திரு.வி.க. நகர் மண்டலத்தை நோய்த்தொற்று இல்லாத மண்டலமாக உருவாக்கி காட்டுவோம் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்