10, 11ம் வகுப்பு மாணவர்கள் வருகை பதிவேடு விவரங்கள்; மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க உத்தரவு

10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேடு விவரங்களை நாளைக்குள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2020-06-11 10:28 GMT
சென்னை,

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு, ஜூன் 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  தொடர்ந்து ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள், மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளிட்ட தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்தன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.  10ம் வகுப்பு பொது தேர்வை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பிலும் வேண்டுகோள் விடப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.  இதன் மீது நடந்த விசாரணையில், தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தேர்வு நடத்துவதுபற்றி, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார்.  இதன் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  இதுபற்றி முதல் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.

அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மேல் வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர் என கூறினார்.  இதனை தொடர்ந்து மாணவர்களை தேர்ச்சி செய்து அறிவிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.  இதன்படி, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவ மாணவியர்களின் வருகை பதிவேடு பற்றிய விவரங்களை நாளைக்குள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கும்படி பள்ளி கல்வித்துறை இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்