தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Update: 2020-06-17 23:45 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கவும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கவும், கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்கவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ‘தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் மருத்துவ செலவை அரசு ஏற்குமா? அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரி மீது புகார் செய்ய வசதி உள்ளதா? என்பது உள்பட பல கேள்விகளை கேட்டு, அதற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கட்டணம் நிர்ணயம்

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர தொற்று உள்ளவர்களுக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கி வைக்க தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பொதுமக்கள் சிகிச்சை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்