முகபாகங்களை பிரதிபலிக்கும் வகையிலான முக கவசங்கள்; பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு

கோவையில் நமது முகங்களை உள்ளபடியே பிரதிபலிக்கும் வகையில் தயாராகும் முக கவசங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Update: 2020-06-20 10:43 GMT
கோவை,

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.  முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.  முக கவசங்கள் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் தயாராகி விற்கப்பட்டு வருகின்றன.

விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முகங்களை பிரதிபலிக்கும் வகையிலான முக கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.  இவற்றுக்கு பலரிடமும் வரவேற்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், கோவையில் வாடிக்கையாளர்களின் முகங்களை உள்ளபடியே பிரதிபலிக்கும் வகையில் முக கவசங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.  அங்குள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில், இதற்காக வாடிக்கையாளர்களின் முகங்களை புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.  பின்பு, புகைப்படத்தில் உள்ள தோற்றம் முக கவசத்தில் இருப்பது போன்று வடிவமைக்கப்படுகின்றன.

இந்த முக கவசங்களை அணியும்பொழுது, மூக்கு மற்றும் அதற்கு கீழ் உள்ள முகபாகங்கள், நமது உண்மையான நிறம் மற்றும் தோற்றம் வெளிப்படும் வகையில் தெளிவாக உள்ளன.  இதனால் அவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இதுபற்றி தசரா என்ற வாடிக்கையாளர் கூறும்பொழுது, பிற வண்ணங்களை கொண்ட முக கவசங்களில், மக்கள் உங்களை அடையாளம் காண முடியாது.  என்னுடைய முகம் தெரியும் வகையிலான இதுபோன்ற முக கவசங்கள் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்