கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதன்முறையாக மதுரையில் 10 பறக்கும் படை

கொரோனோ பரவலை கட்டுப்படுத்த தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை மாநகரில் பத்து பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-06-20 14:34 GMT
மதுரை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்து உள்ளது.  இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 38 பேர் உயிரிழந்து உள்ளனர். புதிதாக 2,396 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.  இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மதுரை மாவட்டத்தில் நேற்றுவரை 495 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  அவர்களில் 350 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.  மதுரையில் 139 பேருக்கு மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனோ பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரையில் பத்து பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பறக்கும் படை, நகரில் உள்ள கடைகள் முறையாக
நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறதா? என கண்காணிக்கும் பணியில் ஈடுபடும்.

கட்டாய முகக்கவசம், சமூக விலகல் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்த குழுவினர் கண்காணிக்க உள்ளனர். தொற்றில் இருந்து காத்து கொள்ளும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது, பறக்கும் படை கடும் நடவடிக்கை எடுக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் இந்த பறக்கும் படை தொடக்க நிகழ்ச்சியானது தொடங்கி வைக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்