வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளத்தில் தங்கி சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு

சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு சாத்தான்குளத்தில் தங்கி இருந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-06-27 00:00 GMT
மதுரை, 

சாத்தான்குளம் வியாபாரி-மகன் உயிரிழந்த விவகாரத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு சாத்தான்குளத்தில் தங்கி இருந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அங்குள்ள மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 19-ந்தேதி இரவில் ஜெயராஜிடம் போலீசார் கடையை அடைக்கச்சொல்லியதாகவும், இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரைத்தேடி சென்ற மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த சாத்தான்குளம் போலீசார், அவர்களை கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைத்தனர். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி இரவில் பென்னிக்ஸ் இறந்துவிட்டார். மறுநாள் அதிகாலையில் அவரது தந்தை ஜெயராஜூம் இறந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஜெயராஜின் மனைவி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து விசாரிக்கவும் முடிவு செய்தது. அதன்பேரில் ஐகோர்ட்டு பதிவாளர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது.


அப்போது, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கோபாலன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் முன்பு ஆஜரானார். அப்போது ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் தொடர்பான வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை இ-மெயில் மூலமாக தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் “கடந்த 19-ந்தேதி போலீசார் கூறியதை மீறி கடையை திறந்து வைத்திருந்ததுடன், போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்ததால் ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அன்று இரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மறுநாள் 20-ந்தேதி மாஜிஸ்திரேட்டு முன்பு அவர்களை ஆஜர்படுத்தி கோவில்பட்டி சப்-ஜெயிலில் அன்று பிற்பகலில் அடைக்கப்பட்டனர். அங்கு பென்னிக்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். 

அங்கு 22-ந்தேதி இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டார். மறுநாள் ஜெயராஜும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசில் சிறை சூப்பிரண்டு சங்கர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்கள் கோர்ட்டு உத்தரவின்பேரில் 3 டாக்டர்கள் குழுவால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது”, என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், “சாத்தான்குளம் தந்தை-மகன் விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை என்பது, கொரோனாவைப்போல ஒருவிதமான நோய் ஆகும். இதை தடுக்க போலீசாருக்கு மனவள பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம்” என அரசு வக்கீலிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, “இறந்தவர்களின் உறவினர்களிடம் அதிருப்தி இருந்தது. பின்னர் அமைதியான முறையில் உடல்களை பெற்று அடக்கம் செய்துள்ளனர். மனஉளைச்சலில் இருக்கும் போலீசாருக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க டி.ஜி.பி., சட்டசெயலாளர் அடங்கிய தலைமையிலான அதிகாரிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கோவில்பட்டி 1-வது மாஜிஸ்திரேட்டு சாத்தான்குளத்திற்கு நேரில் சென்று அங்கு சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தி, அதை பதிவு செய்ய வேண்டும். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, வழக்கு ஆவணங்களை படம் எடுத்துக்கொள்ளலாம்.

இது, இறந்தவர்களை போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்தது தொடர்பான விசாரணைக்கு உதவியாக இருக்கும். இதற்காக சாத்தான்குளம் கோர்ட்டு அலுவலகத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு தங்கிக்கொள்ளலாம். அவர் கோவில்பட்டி சிறையையும் பார்வையிடலாம். இந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் சேகரித்து பாதுகாக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாஜிஸ்திரேட்டுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த வழக்கில் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு எங்களின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் இருந்து வந்த தகவலின் அடிப்படையில், கோவில்பட்டி ஜெயிலில் ராஜாசிங் என்பவர் படுகாயங்களுடன் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்தது. அதுதொடர்பான அறிக்கையையும் போலீசார் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உயிரிழந்த தந்தை-மகனின் பிரேத பரிசோதனை அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். போலீஸ் நிலைய விசாரணை குறித்து டி.ஜி.பி. சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதை அறிந்து, அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள், வன்முறையை தூண்டும் தகவல்கள் பரப்பப்படுவதை தவிர்க்க வேண்டும். இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும். நீதிமன்றத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. இந்த வழக்கு வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்