சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி. புகார்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்து போன விவகாரத்தில் தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் கனிமொழி எம்.பி. புகார் அளித்துள்ளார்.

Update: 2020-06-26 22:32 GMT
சென்னை, 

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 58) ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி கடந்த 19-ந் தேதி அவரை சாத்தான்குளம் போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதை அறிந்து, அங்கு செல்போன் கடை நடத்தி வந்த அவரது மகன் பெனிக்ஸ் (31) போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.

அவர்கள் இருவர் மீதும் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அன்றைய தினம் இரவு அவர்களை போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் போலீசார் கடுமையாக தாக்கி உள்ளனர். பெனிக்சின் ஆசனவாயில் லத்தியை நுழைத்து காயப்படுத்தி உள்ளனர். இதில், அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாகி உள்ளது.

ஜெயராஜின் மார்பு பகுதியில் பூட்ஸ் காலால் பலமுறை மிதித்துள்ளனர். இதன்பின்பு, உடற்தகுதி சான்று பெறுவதற்காக அவர்களை போலீசார், மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். மலக்குடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறிதால் உடற்தகுதி சான்று தர மருத்துவர் மறுத்துள்ளார். அவர்கள் இருவரது உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், டாக்டரை வற்புறுத்தி உடற்தகுதி சான்று பெற்றுள்ளார்.

இதன்பின்பு, அவர்களை மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்று ஆஜர்படுத்தி உள்ளனர். அப்போது 50 மீட்டர் தூரத்துக்கு அப்பால் அவர்கள் இருவரையும் நிறுத்தி போலீசார் சுற்றி நின்றுள்ளனர். இதன்பின்பு, 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளைச்சிறையில் அவர்களை அடைத்துள்ளனர்.

ஏற்கனவே ரத்தப்போக்கு அதிகமானதாலும், ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்ததாலும் பெனிக்ஸ் சிறைக்குள் மயக்கமானார். ஆனால் சிறைக்காவலர்கள், பெனிக்சுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார்.

அதேவேளையில் ஜெயராஜின் உடல்நிலையும் மோசமானது. நெஞ்சுவலி எனக்கூறி அவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரும் இறந்து போனார். கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்தில் அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகள், மாஜிஸ்திரேட்டு, உடற்தகுதி சான்று வழங்கிய மருத்துவ அதிகாரி என அனைவரும் தங்களது கடமையில் இருந்து தவறி உள்ளனர்.

அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான கண்ணியத்துடன் வாழும் உரிமை மற்றும் மனித உரிமையை மதிக்காமல் சாத்தான்குளம் போலீசார் செயல்பட்டுள்ளனர். குற்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளையும் போலீசார் பின்பற்றவில்லை.

சிறைக்கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவும், போலீஸ் நிலை ஆணையும் மீறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 15-க்கும் மேற்பட்ட காவல் மரணங்கள் நடந்துள்ளன. ஆனால், ஒரு சம்பவத்தில் கூட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்