கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகள் கொள்முதல்-அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அதற்கான சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்துள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2020-06-27 22:06 GMT
சென்னை, 

கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அதற்கான சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்துள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


இதுகுறித்து சுகாதராத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தீவிர முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 1,769 மருத்துவர்கள் உட்பட 14 ஆயிரத்து 814 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் முதல்-அமைச்சரால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை வரவழைத்து பயன்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

அதையடுத்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் மூலம் 1,200 குப்பிகள் டாசிலிசம்பாப் (400 எம்.ஜி.), 42 ஆயிரத்து 500 குப்பிகள் ரெம்டெசிவிர் (100 எம்.ஜி.) மற்றும் ஒரு லட்சம் குப்பிகள் ஏனாக்ஸாபரின் (40 எம்.ஜி.) ஊசி மருந்துகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

அதன்படி, இதுவரை அந்த மருந்துகள் முறையே ஆயிரம் குப்பிகள், 1,100 குப்பிகள் மற்றும் ஒரு லட்சம் குப்பிகள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பிகள் ஒரிருநாட்களில் வந்தடையும். இந்த உயரிய உயிர்காக்கும் ஊசி மருந்துகள் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற உயர்தர உயரிய உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்வதும், இம்மருந்துகள் மாவட்ட அளவில் இருப்பில் வைத்து பயன்படுத்துவதிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும் தேவையின் அடிப்படையில் இம்மருந்துகள் கூடுதலாக வரவழைக்கப்படும். முதல்-அமைச்சரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத மனித உயிரிழப்புகளை தவிர்க்க உதவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்