சாத்தான்குளம் உயிரிழப்பு விவகாரத்தில், நிதியுதவியை விட நீதிதான் தேவை - கமல்ஹாசன்

சாத்தான்குளம் உயிரிழப்பு விவகாரத்தில், நிதியுதவியை விட நீதிதான் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2020-06-28 07:29 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது.

இரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம். அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத்தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

நான் தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால் இரண்டு கைதிகளை, காவல் நிலையத்தில் இருந்து, சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா? அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும்? எத்தனை பேர் உடனிருந்திருக்க வேண்டும்?

அந்த உண்மைகளை ஆராயாமல், பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்பது அரசுக்கு புரியவில்லையா? அல்லது இது போதும் என்று அரசு நினைக்கிறதா? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர் கடந்து விடக் கூடாது.

நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்