சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்: வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது -மதுரை ஐகோர்ட் கிளை

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது என மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்து உள்ளது.

Update: 2020-06-29 06:49 GMT
மதுரை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த  வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகமதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. ஐகோர்ட் உத்தரவின்பேரில் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ்  அதிகாரிகளை விடுவிக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்தது. மேலும் அதிகாரிகள் தரப்பில், தந்தை, மகனுக்கு உடல் நலக்குறைவு, மூச்சு திணறலால் உயிரிழந்ததாக மாற்று கருத்துகள் வந்ததாலும்  மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர். 

இதற்கிடையே, சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, இதனை தெரிவித்து, அனுமதி பெற்று சிபிஐயிடம் இவ்வழக்கு  ஒப்படைக்கப்படும் என்றார். 

இந்நிலையில், சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட்கிளை,  சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம்  ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது. அரசு கொள்ளை முடிவு எடுத்த பின் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு முறையிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்டனர். வருவாய் அதிகாரியை காவல் நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுமாறு ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர். 

மேலும், விசாரணை நடத்த ஐகோர்ட் நியமித்த மாஜிஸ்திரேட்டுக்கு ஒத்துழைப்பு தர மறுத்த போலீஸ் மீது அதிருப்தியடைந்தனர். ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு ஒத்துழைக்க போலீஸ் மறுப்பதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  

மேலும் செய்திகள்