சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்; சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மர்மசாவு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Update: 2020-06-29 23:15 GMT
சென்னை,

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அளித்த அறிக்கையை எனக்கு தமிழக டி.ஜி.பி. அனுப்பி உள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி கடையை திறந்து வைத்ததாக குற்றசாட்டி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் மீது 5 குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாத்தான்குளம் தலைமைக் காவலர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் வழக்கு பதிவு செய்தார்.

காவலர்களை பணியாற்ற விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் போன்ற குற்றச்சாட்டும் அவர்கள் 2 பேர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் 19-ந் தேதி இரவு 11.30 மணிக்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை டாக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நீதிமன்ற காவலுக்காக சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்பு 20-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2 பேரும் கோவில்பட்டி துணைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உடல் சுகவீனத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பெனிக்ஸ் 22-ந் தேதி இரவு 9 மணிக்கும், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயராஜ் 23-ந் தேதி காலை 5.40 மணிக்கும் உயிரிழந்ததாக ஜெயில் கண்காணிப்பாளர் சங்கரின் புகாரின் பெயரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விசாரிப்பதற்காக சி.பி.ஐ. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அரசை டி.ஜி.பி. கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மதுரை ஐகோர்ட்டு கிளையும், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவது அரசின் கொள்கை முடிவு என்று கூறியிருக்கிறது.

எனவே டி.ஜி.பி.யின் கோரிக்கையை அரசு பரிசீலித்து அந்த 2 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறது. இதற்கான ஒப்புதலை தமிழக கவர்னர் வழங்கியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்