கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர், முதல்-அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-06-30 19:33 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்நுகர்வை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை மேற்கொண்டுள்ளது. இதனால் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கொரோனா காலத்தில் மின்நுகர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள மின் கட்டணம் என்பது அரசு அறிவித்த நிவாரணத்தொகை ஆயிரம் ரூபாயை விட பல மடங்கு கூடுதலாக உள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அங்கீகரித்து கேரள அரசு உள்பட பல மாநில அரசுகள் மின்கட்டணத்தை குறைத்து உள்ளன. எனவே, இதை கணக்கில் கொண்டும், மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகளை கணக்கில் கொண்டும் தமிழக அரசு மின் கட்டண உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தமிழக அரசே ஏற்றுக் கொண்டு ஈடுசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்