சித்த மருத்துவத்தில் விரைவில் குணமாகும் கொரோனா!

கொரோனாவுக்கு தீர்வு காண உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் விதவிதமான மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளன.

Update: 2020-07-06 00:00 GMT
சென்னை,

கொரோனாவுக்கு தீர்வு காண உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் விதவிதமான மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளன. எனினும் உலகம் முழுக்க ஒரே மருந்தை அங்கீகரிக்கும் நிலை இன்னும் உருவாகவில்லை. அப்படியொரு ஒருமித்த நிலையை எட்டுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அதுவரை அந்தந்த நாடுகளும் அவரவர் வழிமுறைகளில் சில தீர்வுகளைக் கொண்டு மக்களை காப்பாற்றி வருவதைப் போல தமிழகத்திலும், கொரோனாவிற்கு நமது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் தற்போது ஆங்கில மருந்துகளோடு இணைந்து கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளும் தரப்படுகின்றன.

தமிழக மக்கள் பொதுவாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்களுக்கு இயற்கை வழிமுறைகளில் ஓரளவு நிவாரணம் தேடுவது காலம் காலமாக இருந்து வருகிறது. அம்மை நோய் வந்தால், பருத்தி துணியை விரித்து, அதில் வேப்பிலையை பரப்பி, நோயாளிகளை படுக்க வைத்து, தினசரி இளநீர் தந்து ஆற்றுப்படுத்துவதும், மஞ்சள் காமாலை நோய் வந்தால், கீழாநெல்லி எடுத்து கொள்வதும் இன்னும் மரபாக உள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, “கொரோனா பாதித்தவர்களை 3 விதமாக பிரித்து கொள்கிறோம். தோராயமாக சொல்வதெனில், இதில் மிதமான பாதிப்புள்ளவர்கள் 90 சதவீதம் , நடுத்தர பாதிப்புள்ளவர்கள் 8 சதவீதம், தீவிர பாதிப்புள்ளவர்கள் 2 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது.

இந்த மிதமான பாதிப்புள்ளவர்களுக்கு நாங்கள் ஆங்கில மருந்துகளோடு கபசுர குடிநீர் கொடுக்கிறோம். இதில் நல்ல பலன்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. பொதுவாக இங்குள்ள அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் யாவருமே தினசரி காலை கபசுர குடிநீர் அருந்தி வருகிறோம். இது எங்கள் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துகிறது என்ற வகையில், அதை ஒரு தேனீர் போல எடுத்து கொள்கிறோம்.

மேலும், கொரோனா நோயாளிகளுக்கு தோலோடு சேர்த்த எலுமிச்சை, தோல் நீக்கிய இஞ்சி, மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போல தந்து வருகிறோம். இதில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து விரைவில் குணமாகிறார்கள். அந்த வகையில் கொரோனா வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கும் கபசுர குடிநீர் தரப்பட்டு வருகிறது. இன்னும் சில அரசு மருத்துவமனைகளில் யோகா, மூச்சு பயிற்சி ஆகியவையும் அதற்குரிய மருத்துவர்களை வரவழைத்து செய்ய ஊக்குவிக்கிறார்கள்“ என்றார்.

சென்னையில் முதலில் அதிக பாதிப்புக்குள்ளான முதல் இடம் கோயம்பேடு. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் கபசுர குடிநீர் போர்க்கால வேகத்தில் வழங்கப்பட்டதில் பாதிப்புகள் வேகமாக முடிவுக்கு வந்தன என்றார், மாநகராட்சி அதிகாரி ஒருவர். சென்னையின் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் வீடு, வீடாக சென்று, கபசுர குடிநீருக்கான மூலிகை தூள் பாக்கெட்டுகள், மாநகராட்சியின் ஊழியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

வடசென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் பரவலாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாக குறைந்துள்ளதாம்.

கொரோனாவிற்கு சென்னையில் 2 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை அரசு மூலம் வழங்கப்படுகிறது. சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் சென்னை மாநகராட்சி மூலம் 200 படுக்கை வசதிகளுடன் இது செயல்பட்டு வருகிறது. இங்கு இது வரையிலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனர்.

இங்கு கபசுர குடிநீர், மூலிகை கசாயம், சத்தான பாரம்பரிய உணவுகள், சூரிய ஒளி குளியல், ஆவி பிடித்தல், யோகா, மூச்சு பயிற்சி ஆகிய அணுகுமுறைகளில் நோயாளிகளை பூரணமாக குணப்படுத்தி வருகிறார்கள்.

வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மற்றொரு சித்த மருத்துவ சிகிச்சை மையம் 224 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கே கபசுர குடிநீருடன் ஆயுஷ் அமைச்சக அங்கீகாரம் பெற்ற பிரம்மானந்த பைரவ மாத்திரையும் தரப்படுகிறது. மேலும் ஆடாதொடா மணப்பாகு, தாலிசாதி சூரணம் ஆகியவையும் தரப்படுகிறது. சத்தான பாரம்பரிய உணவுகள், மூலிகை தேனீர், மூலிகை சூப் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

இதுதவிர தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழகம் முழுமையும் உள்ள 10-க்கு மேற்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் பல்லாயிரம் நபர்களுக்கு சித்த மருந்துகள் வழங்கி, அவர்களின் உடலில் ஏற்படும் மேம்பாடுகளை ஆவணப்படுத்தி வருகிறது. சாதாரணமாக 5 நாட்களுக்குள்ளாகவே சித்த மருந்துகளில் கொரோனா நோயாளிகள் குணமாவதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2009-ல் பன்றி காய்ச்சல் மற்றும் சார்ஸ் நோய் வந்தபோது, இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் பரிந்துரையை ஏற்று, அன்றைய தமிழக அரசு கபசுர குடிநீர், அமுக்கனா சூரணம், பிரம்மானந்த பைரவம், நெல்லிக்காய் லேகியம் ஆகியவை தந்து குணப்படுத்தப்பட்டது.

2012-ல் டெங்கு காய்ச்சல் பரவியபோது, ஆங்கில மருத்துவத்தில் அதற்கு மருந்து இல்லாத காரணத்தால், சித்த மருந்தான நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு ஆகியவை வழங்க அரசு ஆணையே பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள் மற்றும் 700 அரசு ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமாக கோடிக்கணக்கானோருக்கு அவை வழங்கப்பட்டன.

கொரோனாவிற்கான சித்த மருந்துகள் குறித்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சி.சி.ஆர்.எஸ். ஆய்வகத்திலும், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திலும் பல கோடி ரூபாய் செலவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளனிக்கல் ஆய்வும், பார்மாலஜிக்கல் ஆய்வும் நடந்து கொண்டுள்ளன.

மேலும், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் கடந்த மார்ச் மாதமே விலங்குகளுக்கு கபசுர குடிநீர் தந்து ஆய்வு செய்து வெற்றி கண்டது. மேலும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து 160 கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு குணமானது தொடர்பான ஆவணங்களை உருவாக்கி உள்ளது. மற்றும் சிறைச்சாலையில் கொரோனா கைதிகள் 23 பேருக்கு முழுக்கவே சித்த மருந்துகள் மூலம் குணமானதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

உடல் நலம் குன்றியவர்கள் பொதுவாக இனிப்பு, புளிப்பு சுவையுள்ள உணவுகளை தவிர்த்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் கசப்பு, துவர்ப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் சுக்கு, மிளகு, இஞ்சி, பூண்டு, லவங்கம் ஆகியவற்றை சமையலில் சேர்த்து உண்ண வேண்டும்.

நுரையீரலில் சளி சேர்வதற்கு காரணமான பால் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதே பாரம்பரிய இயற்கை மருத்துவத்தின் சாரம்சமாகும்.

மேலும் செய்திகள்