தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-07-07 13:59 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்றி 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இதில் 59 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 6 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.

சென்னையில் இன்று 1,203 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 2,413 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 1,120 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான திருவள்ளூரில் இன்று 217 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 87 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 334 பேருக்கும், திருநெல்வேலியில் 181 பேருக்கும், தூத்துக்குடியில் 144 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது. இதில் 45 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 20 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். உயிரிழந்தவர்களில் 39 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4,545 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 71,116 பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 45,839 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்