தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு: சென்னையில், கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின - போலீசார் தீவிர கண்காணிப்பு

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடின. போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-13 00:00 GMT
சென்னை, 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-ம் கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கேற்றவாறு அந்தந்த மாவட்டங்களுக்கான தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக 6-ம் கட்ட ஊரடங்கில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே சென்னையில் முழு ஊரடங்கின்போது 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடந்த 5-ந்தேதியும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சென்னையில் 4-வது முறையாக தளர்வு இல்லா முழு ஊரடங்கு நேற்று அமலானது.

இதனால் ஓட்டல்கள், கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், அலங்கார பொருட்கள் விற்பனையகங்கள் என அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. மளிகை கடைகளும், காய்கறி பழக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் நேற்று முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளும் மூடப்பட்டன. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன.

பரபரப்பாக செயல்படும் சென்னையின் வர்த்தக தலமான தியாகராயநகர் பகுதி நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக ரங்கநாதன் சாலையில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டதால், அந்த தெரு ஆள் அரவமின்றி அமைதியாக காணப்பட்டது. அதேபோல பாண்டிபஜார், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட நகரின் வணிக பகுதிகள் கடைகள் அடைக்கப்பட்டு அமைதியாக காட்சி அளித்தன.

முழு ஊரடங்கையொட்டி நகரின் அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, சேப்பாக்கம் வாலாஜா சாலை, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே.சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கான நேற்று நகரின் அனைத்து பிரதான சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் முடக்கப்பட்டன. அந்தவகையில் சென்னை நகரில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் சாலைகளை போல தெரு முனைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. போலீசார் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றிக்கொண்டு யாராவது தேவையில்லாமல் நடமாடுகிறார்களா? என்பது குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

சென்னையின் நகர்ப்புறங்கள் போலவே எண்ணூர், திருவொற்றியூர், மாதவரம், மணலி, திருநின்றவூர், ஆலந்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.



 எவ்வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கால் நேற்று தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம், மதுரவாயல் பைபாஸ் சாலை இணைப்பு பகுதியில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி கிடைப்பதை காணலாம்.



சென்னையில் நேற்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், சாலைகளில் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதை பார்க்க முடிந்தது. இதனால் போலீசார் நேற்று கண்ணில் தெரியும் வாகனங்களை வளைத்து வளைத்து பிடித்தனர். இதில் தேவையில்லாமல் சாலையில் சுற்றி திரிந்தோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமும் வசூலிக்கப்பட்டன.

மோட்டார் சைக்கிளில் சென்ற சில இளைஞர்கள் போலீசாரை கண்டதும் அருகில் உள்ள தெருக்களில் நுழைந்து தப்பித்து ஓடியதையும் பார்க்க முடிந்தது.

மேலும் செய்திகள்