சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி அறிக்கை

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-07-23 00:58 GMT
சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற 8,888 இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற 20 ஆயிரம் தேர்ச்சி பெற்றவர்களில், இறுதியாக அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் 8,538 காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப காவலர்கள் நிரப்பப்பட்டு அவர்களுக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது.

மேலும் அதற்குப் பின்னரும், தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை அதிகம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்ட தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும், அரசின் நிதி நெருக்கடி இன்னும் அதிகமாகிவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு 2019-20 ஆம் ஆண்டு அனைத்து தகுதி சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தலாம் என்றும், அரசாங்கத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது என்பதையும் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்கி, தமிழ்நாட்டிற்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்குகிற வகையில் முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்