முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 5-வது ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் இன்று குடும்பத்தினர் அஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் இன்று குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

Update: 2020-07-26 23:00 GMT
ராமநாதபுரம், 

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. நினைவிடத்தில் கலாமின் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செய்கின்றனர்.

11-வது ஜனாதிபதியாக ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கடந்த 2002-ம் ஆண்டு பதவி ஏற்றார். விண்வெளி, அறிவியல், நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகளை படைத்திருந்தார். மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மாணவர்களிடையே உரையாற்றுகையில் திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார். அவரது உடல் அவருடைய சொந்த ஊரான, ராமேசுவரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அப்துல்கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வருபவர்கள் கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவற்றையும் பார்த்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு தினத்தில், ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவகத்திற்கு அப்துல்கலாம் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சென்று மலர் தூவி மரியாதை செய்வார்கள். கலாமின் கனவை நனவாக்கி ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்குவதற்காக இளைஞர்கள், மாணவர்கள் உறுதிமொழியும் எடுத்து கொள்வார்கள்.

இன்று (திங்கட்கிழமை) அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கூட்டமாக கூடுவதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. எனவே கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் தலைமையில் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்தவர்கள் அத்துடன் மாவட்ட நிர்வாகத்தினரும் சென்று மலர் தூவி மரியாதை செய்ய உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்