மருத்துவ படிப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை - பிரதமருக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம்

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மருத்துவ படிப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2020-07-28 20:17 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து, மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பல முறை கடிதம் எழுதி உள்ளார்.

அதுமட்டுமன்றி, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் அன்புமணி ராமதாசும், வேறு பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு, ‘அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்க தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு உள்ளது.

அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் கள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் பயிலும் வாய்ப்புகளை இழந்து விட்டனர். 35 ஆண்டுகளாக உரிமைகளை இழந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது. அதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிரதமராகிய தாங்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். உங்களால் அவர்களுக்கு நீதி பெற்றுத் தர முடியும் என்ற நம்பிக்கையில் தான் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதி உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்