தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது கவர்னர் முடிவு எடுக்காதது ஏன்? - ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது கவர்னர் முடிவு எடுக்காதது ஏன்? என ஐகோர்ட்டில் அரசு விளக்கமளித்துள்ளது.

Update: 2020-07-29 23:01 GMT
சென்னை, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது இதுவரை கவர்னர் முடிவு எடுக்காதது ஏன்? என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனை ‘பரோலில்’ விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் அற்புதம்மாள் ஆட்கொணர்வு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது தமிழக கவர்னர் இதுவரை முடிவு எடுக்காதது குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், “ராஜீவ்காந்தி கொலை சம்பவம் குறித்து விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையின்படி, இந்த கொலையில் உள்ள சர்வதேச சதி குறித்து பல்நோக்கு கண்காணிப்பு முகமை விசாரித்து வருகிறது. இந்த கொலை சம்பவத்தில் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளன. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இலங்கையில் உள்ளனர். எனவே இந்த முகமையின் விசாரணை முடிவின் அடிப்படையில், 7 பேர் விடுதலை தொடர்பான முடிவு எடுக்க கவர்னர் காத்திருக்கிறார். இந்த தகவலை கவர்னர் மாளிகை அதிகாரி, அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், “29 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்று உள்ளிட்ட சில பாதிப்புகள் இருப்பதால் அவரை பரோலில் விடுவிக்க அவரது தாயார் மனு தாக்கல் செய்துள்ளார்” என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த தலைமை அரசு குற்றவியல் வக்கீல், “பேரறிவாளன் ஏற்கனவே 2 முறை பரோலில் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு பரோல் வழங்கி ஓராண்டு கூட ஆகவில்லை. மேலும் மருத்துவ சான்றிதழ்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை” என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு மனு தாக்கல் செய்யும் நிலை உள்ளது. ஏன் இந்த நிலை? அவர்களது மனுக்களை உடனடியாக ஏன் பரிசீலிக்காமல் அதிகாரிகள் உள்ளனர். மனுதாரரின் மகன் 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளார். அவரது மருத்துவ ஆவணங்களை சிறை அதிகாரிகள் தான் தாக்கல் செய்யவேண்டும். அந்த ஆவணங்களுக்கு தள்ளாத வயதில் மனுதாரர் அற்புதம்மாள் அங்கும் இங்கும் அலைவாரா?.

கடந்த மார்ச் மாதம் கொடுத்த கோரிக்கை மனுக்களை ஏன் இதுவரை பரிசீலிக்கவில்லை.? இதனால் அவர்கள் தேவையில்லாமல் ஐகோர்ட்டுக்கு வருகின்றனர். வக்கீல் செலவு, வழக்கு தாக்கல் செய்ய ஆகும் நடைமுறை செலவுகளை அவர்கள் செய்யவேண்டி உள்ளது. இந்த ஐகோர்ட்டின் நேரத்தையும் செலவு செய்ய வேண்டி உள்ளது. அதிகாரம் உள்ள அதிகாரிகள் பரோல் கேட்கும் மனுவை பரிசீலிக்காமல் இருந்ததற்காக பெரும் தொகை அபராதம் விதிக்க போகிறோம்” என்று எச்சரிக்கை செய்தனர்.

இதையடுத்து தலைமை குற்றவியல் வக்கீல், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்