வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அதிமுக; அதற்கு உரிமை கோருவது திமுக - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு தீர்ப்பிற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2020-07-30 11:29 GMT
சென்னை,

மருத்துவப் படிப்புகளில் இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு சலுகையை வழங்க சட்டரீதியாகவும், அரசியல் சாசன ரீதியாகவும் எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த தீர்ப்பு கிடைத்ததற்கு திமுக தான் முதன்மை காரணம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். மேலும் இடஒதுக்கீடு குறித்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது? வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அதிமுக, அதற்கு உரிமை கோருவது திமுக சொந்த புத்தியும் இல்லை, உழைப்பும் இல்லை. அன்று முதல் இன்று வரை ஒட்டுன்னி அரசியல் செய்வது திமுக” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “சமூகநீதி கட்சி என வாய் கிழிய அடுக்கு மொழி வசனம் பேசும் திமுக, மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் கூட ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுக்காக எந்த ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை. அதிமுக தான் சட்டப்போராட்டம் மூலம் ஓ.பி.சி. மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீடு பெற்று தர கோரிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலன் அதிமுக மட்டும் தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்