டீ கடைகள், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்; சென்னையில் கடைகளுக்கு இரவு 7 மணி வரை அனுமதி

சென்னையில் டீ கடைகள், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்றும் கடைகளுக்கு இரவு 7 மணி வரை அனுமதி வழங்கியும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Update: 2020-07-31 00:33 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை ஆகஸ்டு 31-ந் தேதிவரை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அதில், சென்னை மாநகராட்சி பகுதியில் ஊரடங்கின் நிலை பற்றி அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1-ந் தேதியில் இருந்து (நாளை முதல்) அனுமதி அளிக்கப்படுகிறது.

* தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் குளிர் சாதன வசதி இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பிருந்தது போலவே காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

* ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவலாயங்களில் மட்டும் மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

* காய்கறி, மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகளும் தற்போது இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் (இ-காமர்ஸ்) மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்