கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2020-08-07 21:59 GMT
மேட்டூர், 

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தமிழகம் நோக்கி வந்தது. இதையொட்டி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

நேற்று முன்தினம் காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 625 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்றுமுன்தினம் மாலை முதல் அதிகரிக்க தொடங்கியது. இது நேற்று மாலை அதிரடியாக அதிகமானது. அதாவது வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 64.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 65.55 அடியாக உயர்ந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சேதம் அடைந்தன.

நீலகிரியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத மரங்கள் விழுந்தன. இதனால் கூடலூர்- ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்