முல்லைபெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு

முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-08-13 09:20 GMT
தேனி,

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடிக்காக விவசாயிகள் முல்லைப் பெரியாறு அணையை நம்பி உள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முல்லைப் பெரியாறு அணை பாசனத்திற்காக நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் மாதம் 115 அடி நீர் மட்டுமே இருந்தது. இதனால் பாசனத்திற்காக நீர் திறக்கப்படவில்லை.

தற்போது கேரளாவில் பெய்த கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைக்கு பிறகு, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மதகுகளை திறந்து வைத்து, மலர் தூவி தண்ணீரை வரவேற்றார். 

120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் இருபோக  ஆயக்கட்டு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிகிறது. மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்