பிரதமரின் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு: 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-08-13 12:34 GMT
சென்னை,

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் பதிவேடுகளின்படி நாடு முழுக்க 8.89 கோடி விவசாயிகளுக்கு ரூ.17,793 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் துறையின் பாஸ்வேர்டை திருடி விவசாயிகள் அல்லாத பல லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  பிரதமரின் கிசான் நிதி உதவி திட்ட முறைகேடு குறித்து திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களை 1 வாரத்திற்குள் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் முறைகேடாக சேர்ந்து இருப்பவர்களை உடனடியாக திட்டத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்